திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.51 திருச்சோபுரம்
பண் - பழந்தக்கராகம்
வெங்கண்ஆனை யீருரிவை போர்த்து விளங்குமொழி
மங்கைபாகம் வைத்துகந்த மாண்பது வென்னைகொலாங்
கங்கையோடு திங்கள்சூடிக் கடிகம ழுங்கொன்றைத்
தொங்கலானே தூயநீற்றாய் சோபுர மேயவனே.
1
விடையமர்ந்து வெண்மழுவொன் றேந்திவி ரிந்திலங்கு
சடையொடுங்கத் தண்புனலைத் தாங்கிய தென்னைகொலாங்
கடையுயர்ந்த மும்மதிலுங் காய்ந்தன லுள்ளழுந்தத்
தொடைநெகிழ்ந்த வெஞ்சிலையாய் சோபுர மேயவனே.
2
தீயராய வல்லரக்கர் செந்தழ லுள்ளழுந்தச்
சாயவெய்து வானவரைத் தாங்கிய தென்னைகாலாம்
பாயும்வெள்ளை ஏற்றையேறிப் பாய்புலித் தோலுடுத்த
தூயவெள்ளை நீற்றினானே சோபுர மேயவனே.
3
பல்லிலோடு கையிலேந்திப் பல்கடை யும்பலிதேர்ந்
தல்லல்வாழ்க்கை மேலதான ஆதர வென்னைகொலாம்
வில்லைவென்ற நுண்புருவ வேல்நெடுங் கண்ணியொடுந்
தொல்லையூழி யாகிநின்றாய் சோபுர மேயவனே.
4
நாற்றம்மிக்க கொன்றைதுன்று செஞ்சடை மேல்மதியம்
ஏற்றமாக வைத்துகந்த காரண மென்னைகொலாம்
ஊற்றமிக்க காலன்றன்னை ஒல்க வுதைத்தருளித்
தோற்றமீறு மாகிநின்றாய் சோபுர மேயவனே.
5
கொன்னவின்ற மூவிலைவேல் கூர்மழு வாட்படையன்
பொன்னைவென்ற கொன்றைமாலை சூடும்பொற் பென்னைகொலாம்
அன்னமன்ன மென்னடையாள் பாக மமர்ந்தரைசேர்
துன்னவண்ண ஆடையினாய் சோபுர மேயவனே.
6
குற்றமின்மை யுண்மைநீயென் றுன்னடி யார்பணிவார்
கற்றல்கேள்வி ஞானமான காரண மென்னைகொலாம்
வற்றலாமை வாளரவம் பூண்டயன் வெண்டலையில்
துற்றலான கொள்கையானே சோபுர மேயவனே.
7
விலங்கலொன்று வெஞ்சிலையாக் கொண்டு விறலரக்கர்
குலங்கள்வாழும் ஊரெரித்த கொள்ளையி தென்னைகொலாம்
இலங்கைமன்னு வாளவுணர் கோனை யெழில்விரலால்
துலங்கவூன்றி வைத்துகந்தாய் சோபுர மேயவனே.
8
விடங்கொள்நாக மால்வரையைச் சுற்றி விரிதிரைநீர்
கடைந்தநஞ்சை யுண்டுகந்த காரண மென்னைகொலாம்
இடந்துமண்ணை யுண்டமாலு மின்மலர் மேலயனுந்
தொடர்ந்துமுன்னங் காணமாட்டாச் சோபுர மேயவனே.
9
புத்தரோடு புன்சமணர் பொய்யுரை யேரைத்துப்
பித்தராகக் கண்டுகந்த பெற்றிமை யென்னைகொலாம்
மத்தயானை யீருரிவை போர்த்து வளர்சடைமேல்
துத்திநாகஞ் சூடினானே சோபுர மேயவனே.
10
சோலைமிக்க தண்வயல்சூழ் சோபுர மேயவனைச்
சீலமிக்க தொல்புகழார் சிரபுரக் கோன்நலத்தான்
ஞாலம்மிக்க தண்டமிழான் ஞானசம் பந்தன்சொன்ன
கோலம்மிக்க மாலைவல்லார் கூடுவர் வானுலகே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com